Get paid To Promote at any Location

கறிவேப்பிலையின் பயன்கள்



கறிவேப்பிலை ஒதுக்காதீர்
மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.

நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.

அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம் : இணையம்

வாழைப்பழம்


வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

வரலாறு: வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.

கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.

வகைகள்: 1. இனிப்பான பழவகை 2. சமையல் செய்ய காய்வகை. இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. காய்வகை பழுக்காது. பழுத்தாலும் சாப்பிட நன்றாக இருக்காது

மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு கூட உண்டு. அதேபோல் சிறியது, தட்டை, வழவழப்பு, சொரசொரப்பா, நீளம், விரல் நீளம் என்று பல வடிவங்களையும் வண்ணங்களையும் கொண்டது. விரல் நீளமே உள்ள மன்ழெனொ என்னும் வகைதான் பழுத்ததும் கறுப்பாகிவிடும்.

வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.

குணங்கள்: வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.


இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


சத்துக்கள்: பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.

மருத்துவக் குணங்கள்

1.நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
2.கர்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
3. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
4. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
5.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
6.குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
7. மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
8. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
9.பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
10.வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.
11. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
12. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
13.கொசு கடித்த இடத்தில் வாழைப்பழத் தோலின் உள்பகுதி கொண்டு தேய்த்தால் அரிப்பும் தடிப்பும் போகும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்.

வாழை வெப்ப சீதோஷ்ண பகுதியில் தான் அதிகமாக விளையும். குளிர்பிரதேசத்தில் வராது. இதனால்தான் இந்தியாவில் அதிகமாக விளைகிறது. அதுவும் தென்னிந்தியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழை இல்லாமல் எந்த சுப, அசுப காரியங்களும் இடம்பெறுவதில்லை.எது எப்படியோ வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.